சென்னை: ரவுடி பேரைச் சொல்லி துணிக்கடையில் மிரட்டல்; சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: ரவுடியின் பெயரைச் சொல்லி புதிய துணிகளை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்க மறுத்த சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி நாகராஜ் என்ற வெள்ளை நாகராஜ் துணிக்கடைகளில் மாமூல் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெள்ளை நாகராஜின் பெயரைச் சொல்லி 16 வயது சிறுவன் மற்றும் இரண்டு இளைஞர்கள் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடைக்குச் சென்று புதுத் துணி கேட்டுள்ளனர்.

கடை ஊழியர்கள் கொடுக்க மறுக்கவே பெட்ரோல் குண்டு போடுவோம் என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். அடுத்து அவர்கள் ஜி.ஏ.ரோட்டில் உள்ள கேஜிஎஃப் ஆகாஷ் என்பவரின் துணிக் கடைக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டி மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள துணியை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்காமல் நகர முயன்றுள்ளனர். இதையடுத்து, கடையின் உரிமையாளர் ஆகாஷ் மற்றும் அவரது தந்தை செந்தில்குமார் ஆகியோர் வண்ணாரப்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீஸார், லிங்கேஸ்வரன் (19), திருமலை (20) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோரை கைது செய்து இருவரை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். ரவுடியின் பெயரைச் சொல்லி பணம் கொடுக்காமல் துணிக்கடையில் துணி எடுத்துக் கொண்டு மிரட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE