கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: வேலூர் ஜெயிலர் உள்ளிட்ட 4 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

By செய்திப்பிரிவு

வேலூர்: வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, ஜெயிலர் உள்ளிட்ட சிறைக் காவலர்கள் விசாரணைக்காக சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி சிவக்குமார் என்பவர், விதிகளை மீறி வீட்டில் பணியாளராக அமர்த்தப்பட்டதுடன், ரூ.4.25 லட்சம் திருடியதாகக் கூறி 95 நாட்கள் தனி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வேலூர் சரக சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்ளிட்ட 14 பேர் மீது வேலூர் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் ஏற்கெனவே சேலம், வேலூர் மத்திய சிறையில் விசாரணை நடத்தியுள்ளார். இது தொடர்பான அறிக்கையை வரும் 20-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்ய உள்ளார்.

சிபிசிஐடி விசாரணை எதிரொலியாக, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், எஸ்.பி. அப்துல் ரகுமான் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் மெய்க்காவலர் ராஜு, சிறைக் காவலர்கள் பிரசாந்த், விஜி ஆகியோர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக நாளை (செப்.16) ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, மற்ற சிறைக் காவலர்களுக்கும் சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்படும் என்று சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE