சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூரில் கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக முகமது அன்வர், அவரது உறவினர்கள் ஹாஜிரா பேகம்(62), திருமங்கலம் ஹராபத் நிஷா (27) அவரது குழந்தை அப்னான் (3) ஆகியோர் காரில் சென்னைக்குச் சென்றனர். காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த யாசர் அராபத் (38) ஒட்டினார்.

பின்னர் சென்னையில் இருந்துநேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். நேற்று அதிகாலை சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூர் மேம்பாலம் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சென்ற பரங்கிப்பேட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 5 பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்துக்குள்ளான லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விபத்து நேரிட்ட நெடுஞ்சாலை மேம்பாலம் ஒருவழிப் பாதையாக உள்ளது. இதற்கான அணுகுசாலை பணி முடிவடையவில்லை. மேலும், எச்சரிக்கைப் பலகை மற்றும் தடுப்புகளும் வைக்கப்படவில்லை. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வாகனங்கள் ஆபத்தான நிலையிலேயே செல்கின்றன. விபத்து நேரிட்டவுடன் நெடுஞ்சாலைத் துறையினர் அவசரம் அவசரமாக இப்பகுதியில் தடுப்புக் கட்டைகளை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE