கர்நாடகாவில் இருந்து போலி மதுபானம் கடத்தல்: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 14 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு போலி மதுபான பாட்டில்கள் கடத்தியது தொடர்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: பிற மாநிலங்களில் இருந்துதமிழகத்துக்கு போலி மதுபான பாட்டில்கள் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்படுவதாக புகார்எழுந்தது. இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு உத்தர விடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திருச்சியைச் சேர்ந்த முருகன் என்றமுருகவேல் கைது செய்யப் பட்டார். விசாரணையில் அவர்,கர்நாடக மாநிலம் பெங்களூரு விலிருந்து போலி மதுபான பாட்டில்களை தமிழகத்துக்குக் கடத்தி, சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்தது. இவர் கொடுத்த தகவலின்பேரில் விருதுநகரைச் சேர்ந்த வீரராஜ் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கோவாவில் குடியேறிய தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த மாரிராஜன் என்பவரின் ஏற்பாட்டில்கர்நாடகமாநிலத்திலிருந்து போலி மதுபான பாட்டில்களைகொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்ற போலீஸார் அம்மாநிலத்தைச் சேர்ந்த கேசவமூர்த்தி(50) என்பவரைக் கைது செய்தனர்.

மேலும், அங்கு போலி மதுபானம் பதுக்கி வைத்திருந்த குடோன் கண்டறியப்பட்டது. அங்கிருந்து மாரிராஜன் தமிழ்நாட்டில் பல பகுதிகளுக்குபோலி மதுபானங்களை விநியோகம் செய்தது தெரிய வந்தது. இவர், ராணுவத்தில் பணிபுரிந்து 2000-ம் ஆண்டு பணிஓய்வு பெற்றவர் என்பதும், இவர்மீது தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சரித்திர பதிவேடு 2014 முதல் உள்ளது என்பதும் தெரியவந்தது.

இத்தொடர் நடவடிக்கையில் மாரிராஜன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE