தாம்பரம்: தாம்பரம் அருகே சேலையூரில், போதைப் பொருள் தடுப்பு போலீஸார் எனக் கூறி பொறியியல் கல்லூரி மாணவர்களை தாக்கி விலை உயர்ந்த செல்போன் மற்றும் கேடிஎம் பைக் ஆகியவற்றை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சமீர் (20), கடப்பாவைச் சேர்ந்த அக்பர் (20) இருவரும் சேலையூரில் தனியார் விடுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு இருவரும் கேம்ப் ரோடு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்கு பைக்கில் அகரம் தென் பிரதான சாலையில் சென்றனர்.
அப்போது சேலையூர் ஜெகஜீவன் ராம் நகர் அருகே பைக்கில் வந்த இருவர், மாணவர்களை மடக்கி தாங்கள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் என அறிமுகம் செய்துகொண்டு, “உங்கள் மீது ஏராளமான புகார்கள் வருகிறது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக வந்துள்ள புகார்கள் தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.
அதற்கு அந்த மாணவர்கள், “நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. உங்களுக்கு வந்தது தவறான தகவல்” எனச் சொல்லியுள்ளனர். அதற்கு அந்த இருவரும், “எங்களையே எதிர்த்துப் பேசுகிறாயா?” எனக் கூறி மாணவர்களை தாக்கியுள்ளனர். அத்துடன், அந்த மாணவர்கள் வைத்திருந்த இரண்டு செல்போன்களைப் பறித்துக் கொண்ட அவர்கள், “எங்களை பின் தொடர்ந்து வா” எனக் கூறி இருவரையும் கஸ்பாபுரம் கோலாட்சியம்மன் கோயில் அருகே அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த மாணவர்களின் ஆடைகளைக் களைந்து போலீஸார் போல் சோதனை செய்துள்ளனர். “ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று மாணவர்கள் இருவரும் கேட்டதற்கு, “நீங்கள் போதைப் பொருளை மறைத்து வைத்திருக்கிறீர்கள் என எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று கூறி மேலும் சோதனை செய்துள்ளனர்.
கடைசியாக, “உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் போகிறோம், பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம்” என அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். அதற்கு அந்த மாணவர்கள், “நாங்கள் தவறு ஏதும் செய்யவில்லை. எங்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லுங்கள்” எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், “எங்களை எதிர்த்துப் பேசுகிறாயா?” எனக்கூறி அவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு, அவர்கள் வைத்திருந்த விலையுயர்ந்த கேடிஎம் பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் இருவரும் சேலையூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த வழிப்பறி கும்பல் குறித்து சேலையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலையூர் பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளதால் வெளி மாநில, வெளி மாவட்ட மாணவர்கள் இங்கு தங்கி உள்ளனர். இவர்களை குறிவைத்து சிலர் நள்ளிரவில் வழிப்பறி செய்வது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
9 hours ago
க்ரைம்
9 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
11 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago