சென்னையில் ரூ.10 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அது ஹவாலா பணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் திருமலை பிள்ளை சாலையில் ஏடிஎம்( CDM) மையத்தில் நேற்று (திங்கள்) இரவு பணம் செலுத்தும் போது, இரு நபர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.

பின்னர் ஒரு நபர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் யாரிடமும் சொல்லாமல் விட்டு விட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தகராறு நடந்துள்ளது.

நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் அந்த வண்டியை நாங்கள் வந்து எடுத்துச் செல்கிறோம் என மறுமுனையில் பேசிய நபர் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த தற்போது சென்னை ஏழு கிணறு பகுதியில் வசித்து வரும் ஹமீது என்பவர் தனது நண்பர்கள் இருவருடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையம் வந்து அந்த வாகனத்தை கேட்டுள்ளனர்.

அப்போது பணியில் இருந்த காவலர்கள், வாகனத்தின் ஆவணங்களை எடுத்துக் கொண்டு பாண்டிபஜார் காவல் நிலையம் செல்லுங்கள் எனத் தெரிவித்ததுடன், ஹமீதிடம் இருந்த இருசக்கர வாகனத்தின் சாவியை போலீஸார் வாங்கி சந்தேகத்தின் பேரில் பெட்டியை திறந்து பார்த்தபோது,

அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. அவற்றை எண்ணிப் பார்த்தபோது பத்து லட்ச ரூபாய் இருந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஏடிஎம் மையத்தில் நடந்த தகராறு தொடர்பாகவும், தகராறில் ஈடுபட்ட நபர் யார்? எனவும் ஹவாலா பணமா? எனவும் ஹமீதிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE