கொள்ளிடம் ஆற்றில் 5 இளைஞர்கள் மூழ்கினர்: 3 பேர் உடல்கள் மீட்பு; சகோதரர்களை தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கினர். இதில் 3 பேரில் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், சகோதரர்கள் இருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை சேத்துப்பட்டு நேருபூங்கா ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிராங்கிளின்(23), ஆண்டோ(20), அவரது நண்பர்கள் கிஷோர் (எ)தமிழரசன்(20), சூளையைச் சேர்ந்தகலைவேந்தன்(20), ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மனோகர்(19) ஆகியோர் உணவுவிநியோக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் உட்பட 18 பேர் வேனில்வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்துக்குப் புறப்பட்டனர். பேராலயம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள மகிமைபுரத்தில் சமையல் செய்துள்ளனர். அப்போது, பிராங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன், மனோகர் ஆகியோர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர்.

அவர்களுடன் வந்தவர்கள் தேடியபோது, ஆற்றுக்குள் இருந்த மண்திட்டில் கலைவேந்தன், கிஷோர் ஆகியோர் இறந்துகிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி, பிராங்கிளின், ஆண்டோ, மனோகர் ஆகியோரைத் தேடினர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை மனோகர் உடல் மீட்கப்பட்டது. சகோதரர்கள் பிராங்கிளின், ஆண்டோ ஆகியோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தகவலறிந்து வந்த ஆட்சியர்பா.பிரியங்கா பங்கஜம், உயிரிழந்தவர்களின் நண்பர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உள் ளூர்காரர்களின் எச்சரிக்கையையும் மீறி 5 இளைஞர்களும் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் மேடு, பள்ளங்கள் அதிகம் உள்ளதால், ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், ஆற்றில் மேடு, பள்ளங்களைச் சீரமைக்கவும் வல்லுநர் குழு கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். இதே பகுதியில் 2022 அக். 3-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டியைச் சேர்ந்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE