பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மீது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படும் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீது கடும்நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆக.29-ம் தேதி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இதனால் கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதையறிந்த ஏழை கட்டிடத் தொழிலாளியான அவரது தாயார்,அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அன்றே அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால், ஆக.31-ம் தேதி வரை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமலும், குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்காமலும் மிகவும் அலட்சியமாக காவல் ஆய்வாளர் நடந்து கொண்டுள்ளார். அச்சிறுமியின் பெற்றோரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் உட்காரவைத்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு அலைக்கழித்த தோடு, புகாரில் ஏன் சதீஷ் என்பவரின் பெயரை குறிப்பிட்டிருக்கி றீர்கள் எனவும் மிரட்டி அடித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

பொதுவாக, இத்தகைய புகார்வரும்போது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். அதற்கு மாறாக, பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது பெற்றோரையும் மிரட்டியதுடன், 3 நாள் வரை வழக்குபதியாமல் காலம் கடத்தியிருக்கிறது காவல்துறை. எனவே, சட்டத்தை மீறி தன்னிச்சையாக நடந்து கொண்ட அண்ணா நகர்அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுமி பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சையும், அவரச நடவடிக்கையாக மனநல ஆலோசனையும் வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளையும், தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE