கும்பகோணம் | கோயில்களில் சுவாமி நகைகளை திருடிய இருவர் கைது - 22 கிராம் நகைகள் மீட்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம், பாபநாசத்தில் பல்வேறு கோயில்களில் சுவாமி நகைகளைத் திருடிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 22 கிராம் தங்க நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.

கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் அண்மைக் காலமாக சுவாமி நகைகள், உண்டியல் காணிக்கைகள் திருடு போனது தொடர்பாக, அந்தந்த காவல் நிலையங்களில் கோயில் நிர்வாகிகள் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில், கும்பகோணம் டிஎஸ்பி கீர்த்தி வாசன் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் சிவசெந்தில் குமார் மற்றும் தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் மற்றும் போலீஸார், நேற்று முன்தினம், கும்பகோணம் பாலக்கரையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இவர்கள், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, அவுலியா நகரைச் சேர்ந்த ஜான் பாட்சா மகன் சாகுல் ஹமீது (36), இதேப் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் ராஜ்குமார் (35) என்பதும், இவர்கள், கும்பகோணம், பாபநாசம் பகுதி கோயில்களில் உள்ள சுவாமிகள் நகைகள் மற்றும் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை திருட்டியதும் தெரிய வந்தது.

பின்னர், அவர்களிடம் இருந்து 22 கிராம் தங்க நகைகள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 2 பேரையும், கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இவர்கள், அறந்தாங்கியில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருக்குச் சென்று, கோயில்களில் உள்ள சுவாமி நகைகளையும், உண்டியல்களை உடைத்து காணிக்கைகளையும் திருடிச் சென்று வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE