சென்னை | ரயில்வே அதிகாரியை சிறை வைத்து ரூ.5 கோடி பறிக்க முயன்ற ‘சைபர் க்ரைம்’ கும்பல்

By செய்திப்பிரிவு

சென்னை: சிபிஐ பெயரில் ரயில்வே அதிகாரியை சிறைவைத்து, சைபர் க்ரைம் மோசடி கும்பல் ரூ.5 கோடி பறிக்க முயன்றது. போலீஸார் துரிதமாகச் செயல்பட்டதால் பெரும் மோசடி தவிர்க்கப்பட்டது.

மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ‘சைபர்‘ குற்றச்சம்பவங்களும் பெருகி வருகின்றன. இதில் பாமர மக்கள் மட்டுமின்றி உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளும் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில், தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் இந்த கும்பலிடம் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை தேனாம்பேட்டை ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் 54 வயதுடைய, தெற்கு ரயில்வே சென்னை மண்டல இன்ஜினீயர் ஒருவர் திடீரென்று மாயமாகி உள்ளார்.அவரின் செல்போன் எண் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்ததால், அவர் எங்கே இருக்கிறார்? என்பது தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து, அவருடைய செல்போன் எண்ணை போலீஸார் தொடர்ந்து கண்காணித்த நிலையில் அவரது செல்போன் திடீரென இயங்கியது. அப்போது போலீஸார் அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, ‘பெரியமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளேன்’ என்று கூறியுள்ளார். உடனடியாக போலீஸார் அங்கு சென்று அவரை மீட்டனர்.

வீட்டைவிட்டு வெளியேறியது குறித்து போலீஸாரிடம் அந்த அதிகாரி கூறும்போது, ‘என்னுடைய செல்போன் எண்ணுக்கு புதிய எண்ணில் இருந்து சில தினங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் மும்பை சிபிஐபோலீஸார் என்று அறிமுகம் செய்துகொண்டார். எனது பெயரில் 3 வங்கிகளில் ரூ.38 கோடி கடன் வாங்கி மோசடி நடந்திருப்பதாகவும், அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும்கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்தநான், இணைப்பை துண்டித்துவிட்டேன்.

பின்னர் மீண்டும் அதே செல்போன் எண்ணில் அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர்கள், ரூ.5 கோடிகொடுத்தால் வழக்கில் இருந்து விடுவித்து விடுவோம் என்றனர். இதுபற்றி யாரிடமாவது சொன்னால்உங்கள் படத்துடன் பத்திரிகைகளில் செய்தி வெளியாகும் என்று மிரட்டியதோடு, வீட்டில் தங்காமல் வேறு எங்கேயாவது தங்கி இருந்து பணத்தை தயார் செய்யுமாறு கூறினார்கள். எனவே அவர்கள் கேட்ட பணத்தை திரட்டுவதற்காக பெரியமேடு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளேன்’’ என்றார்.

அதைத்தொடர்ந்து போலீஸார், ‘‘இதுபோன்று மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதுபோன்ற மோசடி கும்பல்தான் மிரட்டி உள்ளது. சிபிஐஅதிகாரிகள் யாரும் இதுபோன்று பேசமாட்டார்கள்’’ என்று அவரிடம் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸில்புகார் அளித்தால் தனது பெயர் வெளியே தெரிந்துவிடும் என்று அஞ்சி, அந்த அதிகாரி புகார் அளிக்கமுன் வரவில்லை. இருப்பினும் அவருக்கு வந்த செல்போன் எண்ணை அடையாளம் கண்டு, மோசடி நபர்களை கைது செய்யும் முயற்சியில் ‘சைபர் கிரைம்‘ போலீஸார் ஈடு பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE