திருச்சி பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மருத்துவர் சிறையில் அடைப்பு

By தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட அரசு மருத்துவரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் அவரது தாயும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மேலப்புதூர் பகுதியில் செயல்படும், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவுத் தொடக்கப்பள்ளியில் 50 மாணவ, மணவிகள் படிக்கின்றனர். இவர்களில் 40 மாணவ, மணவகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிரேஸ் சகாயராணி (54). இவரது மகன் சாம்சன் டேனியல் (31), லால்குடி வட்டம் அன்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல அவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக மருத்துவர் சாம்சன் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணுக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணை நடத்தியதில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, 452, 323 ஐபிசி, 9M RW 10, 11, 12 போக்சோ சட்டம், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மருத்துவர் சாம்சன் டேனியலை போலீஸார் நேற்று (செப். 03) கைது செய்தனர். மேலும், மாணவிகளிடம் விசாரித்ததில், புகார் அளித்தும் பள்ளி தலைமை ஆசிரியையும், மருத்துவரின் தாயாருமான கிரேஸ் சகாயராணி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவத்தை மறைத்ததாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

இருவரையும் திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாலை 6.45 மணியளவில் அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனை வாசலில் அவர்களை வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை சாம்சன் டேனியல் தாக்கப் பாய்ந்தார். போலீஸார் அவரை தடுத்து அழைத்துச் சென்றனர். இரவு 9 மணிக்கு மேல் மருத்துவப் பரிசோதனை முடிந்த பின் நீதிமன்றத்துக்குப் புறப்பட்டனர்.

பரிசோதனை முடிந்து வர தாமதமானதால் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்ப்படுத்த முடியவில்லை. அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட மகிளா நீதிபதி வீட்டுக்கு இரவு 9.45 மணியளவில் போலீஸார் அழைத்து வந்தனர். நீதிபதி விடுப்பில் இருந்ததால் அவர்களை பொறுப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்துவது தொடர்பாக போலீஸார் ஆலோசனை நடத்தினர். அவர்கள் இருவரையும் போலீஸார் ஜீப்பில் அமர வைத்திருந்தனர். அப்போது அவர்களை போட்டோ, வீடியோ எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை பார்த்து, உதவி ஆணையர் ஜெயசீலன், ஆய்வாளர் நிர்மலா ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரவு நேரமானதாலும், நீதிபதியும் இல்லாததாலும் மறுநாள் இன்று ஆஜர்படுத்த முடிவு செய்த போலீஸார், அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். பத்திரிக்கையாளர்களும் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். போலீஸ் வாகனம் தபால் நிலையம் சாலை, டிவிஎஸ் டோல்கேட், பொன்மலை ரயில்வே பாலம், காவிரி பாலம், திருவானைக்காவல் செக்போஸ்ட், மாம்பழச்சாலை, மீண்டும் காவிரி ஆறு பாலம், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக காந்திமார்க்கெட் போலீஸ் நிலையம் வந்து சேர்ந்தது.

பத்திரிகையாளர்கள் குற்றவாளிகளை படம் பிடித்துவிடக்கூடாது என்பதில் போலீஸார் மிகுந்த கவனத்துடன் இருந்தனர். திருச்சி நீதிமன்றத்தில் காந்திமார்க்கெட் காவல் நிலையம் செல்ல 3 கி.மீ., தான் ஆகும். ஆனால் பத்திரிகையாளர்களுக்கு போக்குகாட்டி சுமார் 20 கிலோமீட்டர் சுற்றியது ஏன்? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. தொடர்ந்து இன்று காலை திருச்சி மாவட்ட மகிளா நீதிபதி (பொறுப்பு) ஜெயப்பிரதா முன்னிலையில் சாம்சன் டேனியல், கிரேஸ் சகாயராணி ஆகிய இருவரையும் ஆஜர்படுத்தினர்.

அப்போது கிரேஸ் சகாயராணிக்கும் இதில் தொடர்பு இருந்ததால், கூடுதலாக 109 (உடந்தையாக இருந்தல்) பிரிவு சேர்க்கும்படி நீதிபதி போலீஸாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து போலீஸார் எப்ஐஆரில் 109 பிரிவை சேர்த்தனர். அதைத் தொடர்ந்து இருவரையும் செப்.6-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

அரசியல் அழுத்தம் காரணமா? - பத்திரிக்கையாளர்கள், சாம்சனையும், சகாயராணியையும் படம் பிடிக்கக்கூடாது என்பதில் ஆரம்பத்திருலிந்தே போலீஸார் மிகுந்த கவனமாக இருந்துள்ளனர். இதற்குப்பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக கூறுகின்றனர். இதுகுறித்து திருச்சி அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது மருத்துவர் சாம்சன் டேனியலின் தந்தை சத்தியநாதன் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார். மேலும் அவரது உறவினர்கள் திமுகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அந்த அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே போலீஸார் இந்த விவகாரத்தை கமுக்கமாக முடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE