போதைப்பொருள் விவாகரம்: பொத்தேரியில்  4-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை 

By பெ.ஜேம்ஸ் குமார்

பொத்தேரி: போதைப்பொருள் விவாகரத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் மன உளைச்சலில் பொத்தேரியில் 4-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்லூரி மாணவர்களுக்கிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் கொண்டா ஸ்ரீனிவாச நிக்கில் (20), இவர் சென்னை அடுத்த பொத்தேரியில் அப்போட் வேல்யூ என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தான்.

இவர் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரம் மாநகர போலீஸார் 1000 போலீஸார் ஒரே நேரத்தில் கஞ்சா சோதனையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் நிக்கில் உள்பட 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் போலீஸார் அனைத்து மாணவர்களையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நிக்கில் என்ற மாணவனிடம் விசாரணைக்கு வரும்படி கூறியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோரையும் வர நிர்வாகம் அறிவுறுத்தியது. மேலும் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை காலி செய்ய அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து நிக்கில் நேற்று இரவு திடீரென தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மாணவர் நிக்கில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

கல்லூரி நிர்வாகத்தில் இருந்து உயிரிழந்த மாணவனின் பெற்றோரை கல்லூரிக்கு வரச் சொல்லி சொன்னதாகவும் அது சம்பந்தமாக மாணவர் தனது பெற்றோரிடம் பேசிவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் சக கல்லூரி மாணவர்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸாரின் நடவடிக்கையால் தான் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஆயிரம் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்து போதிய அளவு போதை பொருட்களை கைப்பற்ற முடியவில்லை. கல்லூரி நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாகவும் மாணவர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. போலீஸாரால் விசாரணை செய்யப்பட்ட மாணவர்கள் பலர் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE