திருச்சி பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: லால்குடி அரசு மருத்துவர் கைது

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மேலப்புதூர் பகுதியில் செயல்படும், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப் பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் 40 மாணவ, மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன்டேனியல்(31), லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதுபோல, அவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக மருத்துவர் சாம்சன் டேனியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணுக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியதில் மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், மருத்துவர் சாம்சன் டேனியலை நேற்று கைது செய்தனர்.

விடுதி குழந்தைகள் மீட்பு: மேலும், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் அனுமதி பெறாமல் இந்த விடுதி இயங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, விடுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகள் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கீழ் உள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE