திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸ் குவிப்பு

By இரா.நாகராஜன்

திருத்தணி: ஆர்.கே.பேட்டை அருகே செல்லாத்தூரில் மோட்டார் சைக்கிள் நிறுத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க 30-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள செல்லாத்தூர் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவைச் சேர்ந்த சந்துரு (19), சதீஷ் ( 26) ஆகிய இருவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில், அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றனர். அப்போது, கடையின் அருகில் மோட்டார் சைக்கிளை சந்துரு நிறுத்த முயன்ற போது, அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த குப்பன் (40), மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இதனால் சந்துருக்கும், குப்பனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், இரு பிரிவினரிடையேயான மோதலாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், சந்துரு தரப்பை சேர்ந்த சக்திவேல்(19), சரவணன்(22), 17 வயது சிறுவன் மற்றும் குப்பன் தரப்பை சேர்ந்த மகாலிங்கம்(29), லோகேஷ்(22) ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து, இரு தரப்பையும் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து, தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த திருத்தணி டிஎஸ்பி-யான கந்தன் இரு பிரிவினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினார். இதையடுத்து, இரு பிரிவினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, சந்துரு, குப்பன் என, இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து, ஆர்.கே.பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க 30-க்கும் மேற்பட்ட போலீஸார் செல்லாத்தூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE