மதுரை அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன் திருட்டு: துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறல்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அருகே பெண் காவல்ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், 4 மாதங்களாகியும் துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறுகின்றனர்.

மதுரை அருகேயுள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்த ஷர்மிளா (42), திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் உதயகண்ணன், வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், தங்க நகைகள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

பின்னர் காவல் ஆய்வாளர் வீடு திரும்பியபோது, 400 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. எனினும், அவரது புகாரின்படி 250 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் உத்தரவின்பேரில், 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றது.

அப்போதிருந்த டிஎஸ்பி, ஆய்வாளர்கள் ஆகியோர் மாறுதலில்சென்று, தற்போது புதிதாக டிஎஸ்பி, ஆய்வாளர் பொறுப்பேற்றுள்ளனர். எனினும், இதுவரைகுற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. திருட்டு நடந்து 4 மாதங்களாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறுகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, "காவல் ஆய்வாளர் வீட்டில் சிசிடிவி கேமரா இருந்தும் செயல்படாததால், கொள்ளைசம்பவத்தில் ஈடுபட்டோரை அடையாளம் காண முடியவில்லை. வீட்டுக்கு அருகேயுள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகளைப் பார்த்து வருகிறோம். மேலும், வீட்டுக்கு அருகே இயங்கும் மதுபான பார்களில் உள்ள சிசிடிவிகளின் பதிவுகளையும் கண்காணித்து வருகிறோம். இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனினும், தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE