பல்லாவரம் | காதலித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம்: ஆடியோ வைரலானதால் பெண் ஆய்வாளர் பல்டி

By பெ.ஜேம்ஸ் குமார்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே காதலித்து கர்ப்பமாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் குறித்து பாதிக்கப்பட்டவர் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்ததால் லஞ்சமாக வாங்கிய பணத்தை திருப்பித் தந்து விடுவதாக கெஞ்சியுள்ளார். அவ்வாறு அவர் பேசிய ஆடியோ பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (28). பி.இ பட்டதாரியான இவர், சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு பல்லாவரத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தார். அப்போது, அதே உடற்பயிற்சிக் கூடத்திற்கு அடிக்கடி வந்து சென்ற மணிபாலன் (30) என்பவருடன் திவ்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்தநிலையில் மணிபாலன் கொஞ்சம் கொஞ்சமாக திவ்யாவிடம் இருந்து ரூ.19 லட்சம் வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் திவ்யா கருவுற்ற நிலையில், ஆசை வார்த்தை கூறி மாத்திரை மூலம் மணிபாலன் கருவை கலைக்கவைத்துள்ளார். பின்னர், மணிபாலன் திவ்யாவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். ஒரு கட்டத்தில் திவ்யாவை விட்டு மொத்தமாக விலகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யா அதுகுறித்து மணிபாலனிடம் கேட்ட போது, உன்னை எனக்கு பிடிக்கவில்லை. நீயும் நானும் வேறு வேறு ஜாதி என ஏதேதோ கூறி தட்டிக் கழித்து வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதாகக் கருதிய திவ்யா, இது குறித்து நடவடிக்கை எடுக்க பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் மணிபாலன் மீது புகார் அளித்தார்.

ஆனால், காவல் ஆய்வாளர் சுமதியோ நடவடிக்கை எடுக்காமல், கொடுக்க வேண்டியதை கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி, இதுவரை ரூ.70 ஆயிரம் வரை பல்வேறு தவணைகளில் திவ்யாவிடம் இருந்து லஞ்சமாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு மணிபாலன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், திவ்யா தனக்கு நியாயம் கிடைக்க குடும்ப நலநீதிமன்றத்தை நாடினார். பின்னர் இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவிற்கும் சென்று புகார் அளித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர்நகர் காவல் ஆய்வாளர் சுமதி, உனக்கு நியாயம் கிடைக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டோமா? நீ ஏன் மற்ற இடங்களில் எல்லாம் சென்று புகார் அளிக்கிறாய் என்று கூறியுள்ளார். அதற்கு திவ்யாவோ நீங்கள் கேட்ட பணத்தை நான் கொடுத்த பிறகும் கூட நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் தான், நான் மேற்கொண்டு நீதிமன்றமும், முதல்வரின் அலுவலகமும் சென்று புகார் அளித்தேன் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இதுவரை நான் உன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன். தயவுசெய்து இந்த விஷயத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்த வேண்டாம். இல்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று காவல் ஆய்வாளர் சுமதி திவ்யாவிடம் கெஞ்சத் தொடங்கினார். அந்த ஆடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE