தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கு: வெளிநாடு தப்பி செல்ல முயன்ற நபரை கைது செய்த என்ஐஏ

By துரை விஜயராஜ்

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் அமீது உசேன். இவர் ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற யூடியூப் சேனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதன் மூலம் ‘ஹிஷாப் உத் தகீர்’ என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக, ரகசிய கூட்டங்களை நடத்தி அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்ததை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் கடந்த மே மாதம் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, சைபர் கிரைம் போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், ராயப்பேட்டையில், ஜானி ஜான்கான் தெருவில் உள்ள அலுவலகம், வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, அமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்பட 6 பேரை ‘உபா’ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் சென்றது. பின்னர், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீஸார், என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அந்த ஆவணங்களின் அடிப்படையில், சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த 30-ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் என்கிற முஜ்புர் ரகுமான், அல்தாம் சாகிப் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக கடந்த 5-ம் தேதி மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து, கடந்த 17-ம் தேதி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், ஜலீல் அசீஸ் அகமது என்பவரை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சிப்பதாக என்ஐஏ அதிகாரிகளின் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி செல்ல பெங்களூரு விமான நிலையம் வந்த ஜலீல் அசீஸ் அகமதுவை என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன் தினம் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஜலீல் அசீஸ் அகமது பல ரகசிய கூட்டங்களை நடத்தி, அதில் பங்கேற்கும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தெரியவந்தது.

மேலும், இவர் ரகசிய கூட்டங்களை நடத்துவதில் முதன்மையானவர் என்றும், இந்த அமைப்புக்கு ஆதரவாக சேரும் இளைஞர்களுக்கு பயிற்சியையும் வழங்கியுள்ளதாகவும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE