போக்சோ வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்

By என். சன்னாசி

மதுரை: பட்டியலின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியரின் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் 2018-ல் தேசிய கபடி போட்டி நடந்தது. இப்போட்டியில் பங்கேற்க ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சிறுமி ஒருவரை (கபடி வீராங்கனை) தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ் செல்வன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ராஜபாளையம் பகுதியிலுள்ள லாட்ஜில் தங்கினர். அப்போது, அச்சிறுமிக்கு தமிழ்செல்வன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தமிழ்ச்செல்வனுக்கு 7 ஆண்டு தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தத் தண்டனையை எதிர்த்து ஆசிரியர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் மீதான தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மாணவி படிப்பு, விளையாட்டில் சாதனை செய்யும் லட்சியம் அழிந்து விட்டதை கருத்தில் கொண்டு அவருக்கு மாவட்ட நீதிமன்றம் இழப்பீடாக வழங்கிய ரூ.50 ஆயிரத்தை மேலும் உயர்த்தி ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

‘உடற்பயிற்சி ஆசிரியர் குரு, தந்தை ஸ்தானத்தில் இன்றி தன்னிடம் பயிலும் மாணவியிடம் தவறான நோக்கில் பாலியல் தொந்தரவு செய்த செயல் கண்டிக்கத்தக்கது. இனிமேல் விளையாட்டுத் துறையில் பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உட்படாமல் இருக்க, தமிழக அரசு உரிய சட்டம் இயற்றவேண்டும்’ என ஆலோசனை வழங்கியது மட்டுமின்றி, ‘புதிய சட்டம் இயற்றவேண்டும். அதுவரையிலும்,பெண் குழந்தைகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை அழைத்துச் செல்லவேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE