சென்னை | கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை என நாடகமாடிய பெண் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கம், தர்மராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுடன் சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் சாந்தி மற்றொரு அறையில் தூங்கினார்.

நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். சத்தம் கேட்ட சாந்தி, கதவை திறந்துள்ளார். உள்ளே புகுந்த கொள்ளை கும்பல்சாந்தி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி, அவரது கை, கால்களை கட்டிப்போட்டு வாயில் துணியை திணித்துள்ளது.

தொடர்ந்து மயக்க மருந்தை முகத்தில் அடித்து மயங்கச் செய்து அங்கேயே கட்டிப்போட்டது. பின்னர் பீரோவிலிருந்த 20 பவுன் நகைகள், ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியது.

மறுநாள் காலை, மாமியார் கட்டிபோடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சிவமுருகன், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவித்தார். வளசரவாக்கம் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாகசம்பந்தப்பட்ட பெண்ணே நகைகளை அடமானம் வைத்து விட்டு,அது வெளியே தெரியாமல் இருக்ககொள்ளை நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. இதையடுத்து அப்பெண்ணை கைது செய்தனர்.

இந்த கொள்ளை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்தபோது, அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. குறிப்பாக வெளிநபர்கள் யாரும் வீட்டுக்குள்வராதததை உறுதி செய்த போலீஸார், சாந்தியை தனியாக விசாரித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

மகள் வீட்டிலிருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கூட்டுறவு வங்கியிலும், அடகுக் கடைகளிலும் அடமானம் வைத்துள்ளார் சாந்தி. இதுகுறித்து மகள், மருமகனுக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்தில், சம்பவத்தன்று தனது வாயில் துணியை வைத்து திணித்து, கை, கால்களை கட்டிக் கொண்டு கொள்ளை நாடகத்தை நடத்தியுள்ளார். எதற்காக நகைகளை அடமானம்வைத்தார் என தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE