சென்னை | ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல் விவகாரம்: 4 தனிப்படைகள் அமைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஓடும் ரயிலில் பெண் ஐ.டி. ஊழியரை கழிப்பறையில் தள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 இளைஞர்களை பிடிக்க 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் கடந்த 26-ம் தேதி கரூர் ரயில் நிலையத்தில், ஏறிய பெண் ஐ.டி. ஊழியர், சென்னை நோக்கி பயணித்தார்.

வேலுார் அருகே காட்பாடி பகுதியை ரயில் கடந்தபோது, ஐ.டி. பெண் ஊழியரிடம் இருந்த செல்போனை அதே ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் பறித்து கொண்டு ஓடினார்.

அந்த நபரை ஐ.டி. பெண் ஊழியர் விரட்டி சென்றபோது, செல்போன் பறித்த இளைஞரும், அவருடன் இருந்த மற்றொரு இளைஞரும் இணைந்து ஐ.டி. பெண் ஊழியரை ரயில் கழிப்பறைக்குள் தள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது, பெண் ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் ரயில்வே போலீஸாரிடம் கூறிய தகவல்கள், அங்க அடையாளங்களை பெற்று, ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிய, 2 இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், சென்ட்ரல் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தப்பி ஓடிய 2 இளைஞர்களை பிடிக்க, 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. சம்பவம் நடந்ததாக கூறப்படும் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்களின் பெயர் அட்டவணை பட்டியலையும் கேட்டு பெற்று அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE