கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 10 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் @ பூந்தமல்லி

By இரா.நாகராஜன்

பூந்தமல்லி: பெங்களூருவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட 10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பூந்தமல்லியில் இன்று (ஆக.27) காலை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸார் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக பூந்தமல்லியில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாரிவாக்கம் சிக்னல் அருகே பூந்தமல்லி போலீஸார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த கன்டெய்னர் லாரியை மடக்கிய போலீஸார் அந்த லாரியை சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரியில் 10 டன் அளவுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அவை கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான அந்தப் புகையிலை பொருட்களுடன் கூடிய லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லாரி ஓட்டுநரான பெங்களூருவைச் சேர்ந்த விக்னேஷ் (28) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE