கும்பகோணம்: காண்டாமிருகத்தின் கொம்பை விற்க முயன்ற முன்னாள் விமானப்படை வீரர் உள்பட ஐவர் கைது

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருநாகேஸ்வரத்தில் ஆண்மை விருத்திக்கு என்று சொல்லி ரூ.20 லட்சம் மதிப்பிலான காண்டாமிருகத்தின் கொம்பை விற்க முயன்ற முன்னாள் விமானப்படை வீரர் உள்பட 5 பேரை கும்பகோணம் வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநாகேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காண்டாமிருகத்தின் கொம்பு விற்பனை செய்யப்படுவதாக, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு வன மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கும்பகோணம் வனத்துறை வனச்சரக அலுவலர் என்.பொன்னுசாமி தலைமையிலான வனத்துறையினர், அந்த விடுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு காண்டாமிருகத்தின் கொம்பு விற்பனை செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் வனத்துறையினர், அங்கிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான காண்டாமிருகத்தின் கொம்பு ஒன்றைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முன்னாள் விமானப்படை வீரரும், தற்போது கும்பகோணம், பழவத்தான்கட்டளையில் வசித்து வருபவருமான கு.கலியபெருமாள் (80), திருவாரூர் மாவட்டம் குடவாசல், விஷ்ணுபுரம், உள்மானியத் தெருவைச் சேர்ந்த அ.ஹாஜா மைதீன் (76), திருநீலக்குடி அந்தமங்கலம் காரைக்கால் பிரதானச் சாலையைச் சேர்ந்த க.செந்தில் (45), திருநாகேஸ்வரம் இந்திரா நகரைச் சேர்ந்த ம.தென்னரசன் (47), பழவத்தான்கட்டளை அருணா ஜெகதீசன் கார்டனைச் சேர்ந்த பா.விஜயக்குமார் (57) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது: “கலியபெருமாள், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் விமானப் படையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, மலேசியா நாட்டில் இருந்து, இந்த காண்டாமிருகத்தின் கொம்பை கடந்த 1982ம் ஆண்டு உரிய சான்றிதழ் பெற்று வாங்கி உள்ளார். ஆனால், அந்தக் கொம்பை, தமிழகத்திற்கு கொண்டு வரும்போது, இங்கு அதற்கான அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர், அதைப் பெறவில்லை.

மேலும், இந்தக் கொம்பில் ஆண்மை விருத்திக்கான மருந்து இருப்பதாக கூறிய கலியபெருமாள், இதை ரூ.20 லட்சத்திற்கு, செந்தில், தென்னரசன், விஜயகுமார் ஆகியோர் மூலம் ஹைஜா மைதீனிடம் விற்பனை செய்ய முயன்றார். அந்த சமயத்தில் தாங்கள் அவரை கைது செய்துவிட்டோம். இந்தக் கொம்பை வழக்கு விசாரணை முடிந்தவுடன் அழித்துவிடுவோம்” என்று வனத்துறையினர் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE