ஓசூர் அருகே முன்னால் சென்ற 8 வாகனங்கள் மீது மோதிய கிரானைட் லாரி: ஒருவர் உயிரிழப்பு; மேலும் 7 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூர் அருகேயுள்ள சானமாவு பகுதியில், ஓசூர்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டு, அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்கின்றன.

இந்நிலையில், நேற்று மதியம் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி,கிரானைட் கல் ஏற்றிய லாரி அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் மெதுவாகச் சென்ற 4 கார்கள், கன்டெய்னர் லாரி உள்ளிட்ட 3 லாரிகள் மற்றும் அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் இரு கார்கள் முற்றிலும் சேதமடைந்தன.

பெங்களூருவிலிருந்து கோவை நோக்கிச் சென்ற காரில் பயணித்த, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் (33), அரவிந்த் (30), தஞ்சாவூர் துரை (24), பழநி கார்த்திக் ராஜா (36), மற்றொரு காரில் வந்த கிருஷ்ணகிரி ஓட்டுநர் ரவி (45), வேல்விழி (67), அவரது மகன் பூபேஷ் (35) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு, ஓசூர்,கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஓட்டுநர் ரவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வேல்விழி, துரை ஆகியோருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE