திருவெண்ணெய்நல்லூரில் ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி செயல் அலுவலர் கைது

By செய்திப்பிரிவு

விழுப்புரம்/சிவகங்கை: வீட்டுமனை பதிவுக்கு தடையின்மைச் சான்றிதழ் வழங்க ரூ.1.80 லட்சம் லஞ்சம் வாங்கிய திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப் பிரிவில், சில வீட்டு மனைகளை வாங்குவது தொடர்பாக சார் பதிவாளர் அலுவலகம் சென்றார். அங்கு, நிலத்தை பதிவு செய்ய முடியாத வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் தடை மனு கொடுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிசெயல் அலுவலர் முருகனை நேரில் சந்தித்து கேட்டபோது, வீட்டுமனை பதிவு செய்ய தடையின்மைச் சான்று வழங்க ரூ.3லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரூ.1.80 லட்சம் தந்தால் தடையின்மை சான்று வழங்குவதாக செயல் அலுவலர் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சேட்டு, இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் செய்தார். பின்னர், போலீஸார் ஆலோசனைப்படி, ரசாயனப்பொடி தடவிய ரூ.1.80 லட்சத்தைதிருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் முருகனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆய்வாளர் ஈஸ்வரி, உதவி ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீஸார், செயல் அலுவலர் முருகனைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு அலுவலர் கைது: சிவகங்கை அருகேயுள்ள சூரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகமூர்த்தி. இவர் அந்தப் பகுதியில் கோழிப் பண்ணை தொடங்குவதற்காக, தடையின்மைச் சான்று கோரி மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் கொடுக்குமாறு தீயணைப்புத் துறை மாவட்ட துணை அலுவலர் நாகராஜன் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கற்பகமூர்த்தி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.

பின்னர், போலீஸார் ஏற்பாட்டின்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் துணை அலுவலர் நாகராஜனிடம், ரசாயனம் தடவிய ரூ.5,000 நோட்டுகளை கற்பகமூர்த்தி கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி ஜான்பிரிட்டோ, உதவி ஆய்வாளர் ராஜாமுகமது மற்றும் போலீஸார் நாகராஜனைக் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE