ம.பி. கிராமங்களில் திருட்டு, கொள்ளை பற்றி சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கும்பல்: ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக புகார்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சுமார் 117 கி.மீ. தொலைவில், ராஜ்கர் மாவட்டத்தில் காடியா, குல்கேடி, ஹல்கேடி ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த கிராமங்களில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பிக்பாக்கெட், வழிப்பறி, கூட்டமான இடங்களில் பைகளை பறிப்பது, வேகமாக ஓடுவது, போலீஸாரை ஏமாற்றுவது, பிடிபட்டால் தாக்குதலை சமாளிப்பது என சகல பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காகரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரைகட்டணமாக ஒரு கும்பல் வசூலிக்கிறது. ஓராண்டு பயிற்சிக்கு பிறகு அந்தக் கும்பலின் தலைவரிடம் இருந்து சிறுவர்களின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல்ரூ.5 லட்சம் வரை தரப்படுகிறது.

இந்த கிராமங்கள் மிகவும் தந்திரமான திருடர்களை உருவாக்கியுள்ளன, இவர்களின் குற்றச் செயல்கள் இந்தியா முழுவதும் தலைப்புச் செய்திகளாக மாறியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஹயாத் ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி தொழிலதிபர் ஒருவரின் மகன் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பையை ஒரு சிறுவன் திருடிச் சென்றதால் நிகழ்ச்சியே சோகமயமானது.

விழா முடிந்து மணமக்களை ஆசீர்வதிக்கும்போது, ​மணமகனின் தாய் தனது வெள்ளைப் பையை அருகில் வைத்தபோது, அதனை மைனர் திருடன் திருடிச் சென்றுள்ளான். திருட்டுக்கு பிறகு அவனது கும்பல் காடியா கிராமத்துக்கு தப்பிச் சென்றுள்ளது. திருடப்பட்ட நகைகளை மிக விரைவாக அப்புறப்படுத்திய அக்கும்பல், கன்வர் யாத்திரையில் பங்கேற்று அதில் கலந்துவிட்டது. போலீஸார் மிக விரைவாக செயல்பட்டு அந்த சிறுவனை கைது செய்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

போலீஸாருக்குள்ள சவால்கள்: இது தொடர்பாக ம.பி. சட்டம்ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெய்தீப் பிரசாத் கூறுகையில், “ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமங்கள் குற்றவாளிகளின் புகலிடமாக உள்ளன. இந்த குற்றவாளிகள் மிகவும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். நகைக் கடைக்காரரிடம் செல்லாமலேயே இவர்களால் நகைகளை மதிப்பிட முடிகிறது. திருடுவது, சூதாடுவது, மதுபானம் விற்பது ஆகியவற்றில் சிறுவர்களுக்கு பயிற்சி அளிப்பதுஅவர்களின் முதன்மை நடவடிக்கையாக உள்ளது. போலீஸாரின் விரைவான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பு காரணமாக இவர்கள் மீதான வழக்குகள் துப்பு துலக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

போடா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராம்குமார் பகத் கூறுகையில், “இங்குள்ள கிரிமினல்கள் நகைப் பை திருட்டு, வங்கிக் கொள்ளை மற்றும் பிற குற்றச்செயல்களில் மிகவும் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். பெரும்பாலும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே திருட்டில் ஈடுபடுத்துகின்றனர். இந்த கிராமங்களை சேந்த 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் நாடு முழுவதும் திருமணவிழாக்களில் நடந்த திருட்டுசம்பவங்களில் தொடர்புடைய வர்களாக உள்ளனர்” என்றார்.

கிராமத்தினுள் புதிய நபர் யாரேனும் நுழைந்தால் கிராம மக்கள் அனைவரும் எச்சரிக்கையாகி விடுகின்றனர். பெண்கள் காது கேளாதவர் போல நடிக்கின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE