சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 780 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: மலேசியாவுக்கு கடத்த முயன்ற 780 நட்சத்திர ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையிலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயாராக இருந்தது.

அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்ராஹிம் (36), யூசுப் (35), அஸ்ரப் (40) ஆகியோர் சுற்றுலாப் பயணிகளாக மலேசியா செல்ல வந்திருந்தனர்.

அவர்கள் வைத்திருந்த பெரிய அட்டைப் பெட்டிகளை திறந்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, 780 நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்தன. நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில், சதுப்பு நிலப்பகுதிகளில் இருந்து, இந்த நட்சத்திர ஆமைகளைப் பிடித்து மலேசியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என்று தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்த நட்சத்திர ஆமைகள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதேபோல், கோலாலம்பூரில் இருந்து வந்த சென்னை பயணியிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள 1,500 இ-சிகரெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE