பர்கூரில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: என்சிசி பயிற்சியாளர், தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 9 பேர் கைது

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே பள்ளியில் நடந்த என்சிசி முகாமிற்குச் சென்ற 8-ம் வகுப்பு மாணவி, பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் பயிற்சியாளர், தாளாளர், முதல்வர் உள்பட 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி.) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், என்சிசி முகாமிற்குச் சென்ற 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர், மாணவியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். உடனே அவரது பெற்றோர் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ-யான சூர்யகலா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தார். இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி-யான உமா, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி-யான தங்கதுரை ஆகியோர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, தனியார் பள்ளியின் முதல்வரான திருப்பத்தூர் பூங்காவனத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (35), பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியரான கந்திகுப்பம் இந்திரா நகரைச் சேர்ந்த ஜெனிபர் (35), பள்ளியின் தாளாளரான கந்திகுப்பத்தைச் சேர்ந்த சாம்சன் வெஸ்லி (52), பயிற்சியாளர்களான தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கொள்ளுப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (39),கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பேரிகை அருகே உள்ள அமுதகொண்டப்பள்ளியை சேர்ந்த சிந்து (21), கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சேர்ந்த பெண் சத்யா (21), பர்கூர் ஒரப்பம் அருகே உள்ள சின்ன ஒரப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (54), மற்றொரு ஆசிரியரான கோமதி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான சுப்பிரமணி முன்னாள் சி.ஆர்.பி.எப். வீரர். தற்போது காவேரிப்பட்டணம் பிவிசி மில் ரோட்டில் வசித்து வருகிறார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காவேரிப்பட்டணம் திம்மாபுரம் காந்தி நகரைச் சேர்ந்த சிவா என்கிற சிவராமன் (28) என்பவரை தனிப்படை போலீசார் கோயம்புத்தூரில் கைது செய்தனர்.

சிவராமனை போலீஸார் விசாரணைக்காக கோவையிலிருந்து அழைத்து வந்தபோது, அவர் தப்பியோட முயன்றதில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தற்போது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கில் தலைமறைவாக உள்ள சுதாகர் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்

கட்சியில் இருந்து நீக்கம்: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

8-ம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவமும், சம்பவத்தை மறைத்து அதற்கு உடந்தையாக பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் இருந்ததும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

மேலும்