சோழவரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடி குண்டு வீசிய சம்பவம்: 4 பேர் ஆந்திராவில் கைது

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: சோழவரம் பகுதியில் திமுக பிரமுகர் வீடு மற்றும் லாரி யார்டில் நாட்டு வெடி குண்டுகள் வீசியது தொடர்பாக பிரபல ரவுடி உட்பட 4 பேரை ஆந்திராவில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (38). இவர், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி அபிஷா பிரியதர்ஷினி, சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஜெகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

தொடர்ந்து அந்தக் கும்பல், சோழவரம் அடுத்துள்ள சிறுணியம் பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வரும் வெங்கடேசன் என்பவரது மகன்களான சரண்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரது வீட்டு வளாகத்திலும் புகுந்து, அங்கிருந்த இரண்டு கார்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தியது. பிறகு, அக்கும்பல், சோழவரம் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் லாரி பார்க்கிங் யார்டு மீது நாட்டு வெடி குண்டுகளை வீசியது.

அப்போது, சத்தம் கேட்டு ஓடிவந்த, சோழவரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சிவாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது அந்தக் 5 பேர் கும்பல். இச்சம்பவங்கள் குறித்து, சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நாட்டு வெடி குண்டுகள் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வந்ததனர். இந்நிலையில், நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக பிரபல ரவுடிகள் டியோ கார்த்திக், சுரேஷ், விக்கி உள்ளிட்ட 4 பேரை ஆந்திராவில் இன்று காலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE