காணாமல் போன உத்தராகண்ட் செவிலியர் உ.பி-யில் வன்கொடுமை செய்து கொலை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காணாமல் போன உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த செவிலியர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது உடல் புதருக்குள் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவர் வசம் இருந்த பணம் மற்றும் செல்போனை குற்றவாளி எடுத்துச் சென்றுள்ளார்.

காணாமல் போன செவிலியர் குறித்து அவரது சகோதரி கடந்த மாதம் 31-ம் தேதி உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்நிலையில், அவரது உடல் அழுகிய நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்து நெரிக்கப்பட்டு செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உடற்கூறு ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. கொலை செய்யப்பட்ட செவிலியர் கடந்த 30-ம் தேதி பணிக்கு சென்று திரும்பியுள்ளார். இதனை போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். அவர் ருத்ராபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

செவிலியரின் மொபைல் எண்ணை அடிப்படையாக கொண்டு காவல் துறையினர் தங்களது தேடுதலை தொடங்கியுள்ளனர். சிசிடிவி காட்சிகளையும் கூடுதலாக ஆய்வு செய்தனர். குற்றம் நடந்த நாளன்று செவிலியரை சந்தேகப்படும் வகையிலான நபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். அவரை பிடிக்க உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் என போலீஸார் சென்றுள்ளனர். இறுதியாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பதுங்கி இருந்த அவரையும், அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர். அவர் பெயர் தர்மேந்திரா என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தர்மேந்திரா குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தனியாக சென்ற செவிலியரை அவர் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளார். மேலும், அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் மொபைல் போனை எடுத்து சென்றுள்ளார். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE