மதுரை: கணவன் - மனைவி சண்டையை விலக்கப்போன எஸ்ஐ-க்கு கையில் அரிவாள் வெட்டு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் கணவன் - மனைவிக்கு இடையில் நடந்த சண்டையை விலக்கப் போன எஸ்ஐ-க்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி காவல் நிலைய எஸ்ஐ-யாக இருப்பவர் நத்தர் ஒலி. இவர் நேற்று இரவு அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிந்தார். அப்போது, உத்தங்குடி பாண்டியன் தெருவில் கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சினை நடப்பது தொடர்பாக காவலர் நத்தர் ஒலிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து காவலர் அங்கு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மனைவியுடன் பிரச்சினையில் ஈடுபட்ட தங்கையா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது தங்கையா, பிரிந்து வாழும் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு எஸ்ஐ நத்தர் ஒலி அறிவுறுத்தியுள்ளார். அதைக் கேட்காமல் தங்கையா, வீட்டில் இருந்த அவரது தாயாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதை எஸ்ஐ நத்தர் ஒலி தடுத்துள்ளார்.

அப்போது, எஸ்ஐ-யின் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. இதனிடையே, காயமடைந்த காவலர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இச்சம்பவம் தொடர்பாக தங்கையாவை (35) மாட்டுத்தாவணி போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE