தென் மண்டல காவல் சரகத்தில் கைப்பற்றப்பட்ட 5 டன் கஞ்சா எரிப்பு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தென்மண்டல காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 495 வழக்குகளில் கைப்பற்றப்பட் 5,191 கிலோ கஞ்சா, நாங்குநேரி அருகே உள்ள அசப்டிக் சிஸ்டம்ஸ் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வைத்து இன்று திருநெல்வேலி சரக டிஐஜி-யான மூர்த்தி தலைமையில் எரித்து அழிக்கப்பட்டது.

தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. இந்நிலையில், போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தென்மண்டல காவல் சரகத்துக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களிலும் திருநெல்வேலி மற்றும் மதுரை மாநகரங்களிலும் போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 5,191 கிலோ கஞ்சாவை எரித்து அழிக்கும் பணி இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பாப்பான்குளம் பொத்தையடி பகுதியிலுள்ள அசெப்டிக் சிஸ்டம்ஸ் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக இந்த கஞ்சா எரியூட்டப்பட்டது. திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா.மூர்த்தி தலைமையில் தென்மண்டல போதை பொருள் அழிப்புக்குழு உறுப்பினரான மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பசேரா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாங்கரே பிரவின் உமேஷ், மதுரை தடயவியல் நிபுணர் விஜயதரணி ஆகியோர் முன்னிலையில் கஞ்சா எரியூட்டப்பட்டது.

பின்னர், டிஐஜி-யான பா.மூர்த்தி கூறும்போது, "மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டத்தில் 141 கஞ்சா வழக்குகளும், மதுரை மாநகரத்தில் 75 வழக்குகளும், மதுரை புறநகர் மாவட்டத்தில் 95 வழக்குகளும், தேனி மாவட்டத்தில் 57 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா இன்று எரித்து அழிக்கப்பட்டுள்ளது” என்று டிஐஜி பா.மூர்த்தி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE