செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 7.5 டன் கஞ்சா அழிப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: வடக்கு மண்டல காவல் சரகத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7.5 டன் கஞ்சா இன்று எரிவாயு எரியூட்டும் இயந்திரம் மூலம் அழிக்கப்பட்டன.

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, டன் கணக்கிலான கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் இன்று நடைபெற்றது. அதன்படி, செங்கல்பட்டு அருகே தென்மேல் பாக்கம் ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவுகளை எரியூட்டும் நிறுவனத்தில் சுமார் 7.5 டன் அளவிலான கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.

வடக்கு மண்டல காவல் சரகத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் பதிவான 212 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 956.65 கிலோ கஞ்சாவும், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு மூலம் தமிழகம் முழுவதும் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா, விழுப்புரம் சரக டிஐஜி-யான திஷால் மித்தல் முன்னிலையில் எரிவாயு எரியூட்டும் இயந்திரத்தில் போட்டு அழிக்கப்பட்டன.

இதில் செங்கல்பட்டு எஸ்பி-யான சாய் பிரனீத், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்பி-யான சாம்சன், செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி-யான வேல்முருகன், விழுப்புரம் டிஎஸ்பி-யான பிரதீப்குமார் உள்ளிட்ட போலீஸார் கஞ்சாவை தீயிட்டு எரித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE