சேலம் அரசு மருத்துமனையில் குழந்தையைக் கடத்திய பெண் கைது: சிக்கியது எப்படி?

By எஸ்.விஜயகுமார்

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பொறியியல் பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், கருச்சிதைவு ஏற்பட்டதை மறைத்து, குழந்தையை கடத்திச் சென்று, அந்தக் குழந்தை தனக்கு பிறந்தது என வீட்டாரை நம்ப வைக்க முயற்சித்தது தெரியவந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த தங்கதுரையின் மனைவி வெண்ணிலா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வெண்ணிலாவுக்கு, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வெண்ணிலாவுடன் இருந்த அவரது தாயார், தனது பேரக்குழந்தையை, பிரசவ வார்டில் இருந்து, மருத்துவ பரிசோதனைக்காக வெள்ளிக்கிழமை மதியம் வெளியே கொண்டு சென்றார். அப்போது, அவருக்கு உதவி செய்வது போல வந்த பெண் ஒருவர், குழந்தையை தான் தூக்கிக் கொண்டு வருவதாகக் கூறி, குழந்தையை வாங்கிக் கொண்டு சிறிது தூரம் நடந்து வந்து, பின்னர் குழந்தையுடன், அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் பாட்டி தகவல் தெரிவிக்க, அவரது உறவினர்கள் மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, மருத்துவமனை காவல் நிலையத்தில் அவர்கள் புகார் செய்தனர். மருத்துவமனையின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸார், ஆய்வு செய்தனர். அதில், முகக்கவசம் அணிந்தபடி, பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதும், பின்னர் அவர் ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் உதவி ஆணையர் ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குழந்தையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

போலீஸார், ஆங்காங்கே வாகன சோதனை மேற்கொண்டதுடன், பேருந்துகளிலும் சோதனை நடத்தினர். மேலும், கடத்தப்பட்டது பச்சிளம் குழந்தை என்பதால், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு குழந்தையுடன் சந்தேகப்படும்படி எவரேனும் வந்தால், தகவல் தெரிவிக்கும்படி, சுகாதாரத் துறையினரையும் போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
மேலும், சமூக வலைதளங்களில், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து, பச்சிளம் குழந்தையை, முகக்கவசம் அணிந்த பெண் கடத்திச் செல்லும் கண்காணிப்பு கேமரா பதிவினை போலீஸார் பதிவிட்டு பரவச் செய்தனர்.

இந்நிலையில், சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த காரிப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, பச்சிளம் குழந்தையை ஒரு பெண் நேற்று இரவு சிகிச்சைக்கு கொண்டு வந்துள்ளார். ஏற்கெனவே, சமூக வலைதளத்தில் குழந்தை கடத்தல் சம்பவத்தை அறிந்திருந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சந்தேகம் அடைந்து, மருத்துவ பரிசோதனை நடத்தியதில், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்ததற்கான உடல் மாற்றம் ஏதுமில்லாததை அறிந்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று விசாரித்தபோது, அந்தப் பெண், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அந்தப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறியது: “காரிப்பட்டி அருகே நேருநகர் பகுதியைச் சேர்ந்த அகிலன் என்பவரின் மனைவி வினோதினி (24). இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த மே மாதம் கருச்சிதைவு ஏற்பட்டது. இதை தனது வீட்டாரிடம் மறைத்து, தான் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்து வந்தார்.எனவே, அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை கடத்திச் சென்று, தனக்கு பிறந்த குழந்தை என்று வீட்டாரை நம்ப வைக்க திட்டமிட்டு, குழந்தையை கடத்திச் சென்று, காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையுடன் சிகிச்சைக்கு சேர்ந்தார். இது குறித்து தனது வீட்டினர் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்க, அவர்களும் குழந்தையை வந்து பார்த்துச் சென்றனர்.

சந்தேகம் அடைந்து, பெற்றோர் விசாரித்தபோது, தான் பணிபுரியும் இடத்திலேயே குழந்தை பிறந்ததால், அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, காரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்ததாகக் கூறி, அவர்களை நம்ப வைத்துவிட்டார். தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக, அவர் துணிச்சலாக இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், குழந்தையை அவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, குழந்தையை கொண்டு வந்து, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தாயிடம் சேர்த்துவிட்டோம். புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ், வினோதினி கைது செய்யப்பட்டுள்ளார்,” போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE