வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம்: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை: வேலைவாய்ப்புகளுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என மாநிலசைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் வேலைதேடும்மக்களை சில போலி முகவர்கள்கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை காட்டி ஏமாற்றி, சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களை குறிவைத்து, அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறிஇம்முகவர்கள் வேலைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அங்கு சென்றதும் அவர்களது பாஸ்போர்ட்டுகளை பறித்துக் கொள்ளும் சைபர் க்ரைம் கும்பல், அந்நாடுகளில் இருந்து அவர்கள் வெளியேற வழியில்லை என்று மிரட்டி இணைய அடிமைகளாக அவர்களை மாற்றி விடுகின்றனர். தொடர்ந்து சட்டவிரோதமான கடத்தல்கள், முதலீட்டு மோசடிகள், டேட்டிங் மோசடிகள் போன்ற சைபர் க்ரைம் குற்றங்களிலும் ஈடுபட கட்டாயப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்திலிருந்து கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் பயணம் செய்த பலர் தற்போது வரை இந்தியா திரும்பவில்லை.

இவர்கள் சைபர் குற்றங்களில்ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வெளிநாட்டில் வேலைதேடும் நபர்கள், ஏதேனும் வேலைவாய்ப்பு முகவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால், அவர்கள்பதிவு செய்யப்பட்ட ஏஜென்சியா அல்லது போலியா என்பதை https://emigrate.gov.in/#/emigrate/emigrant/list-of-ra-consolidate-report என்ற இணையதளத்தில் உறுதிசெய்ய வேண்டும்.

முகவர்களின் செல்போன் எண்ணை https://cybersafe.gov.in என்ற சைபர் பாதுகாப்பு தளத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைவாய்ப்புகளுக்காக சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்லஒருபோதும் ஒப்புதல் அளிக்காதீர்கள்.

இவ்வாறு அதில் கூடுதல் டிஜிபி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE