ஆம்ஸ்ட்ராங் வழக்கு: தனிப்படை முன்பு ஆஜரான பால் கனகராஜிடம் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் குறித்து ரகசிய விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் போலீஸார் முன் ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக,தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழகஇளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். மேலும், கொலை பின்னணியில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள அவரது தந்தை பிரபல ரவுடியான நாகேந்திரன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு ரவுடியான சம்போசெந்திலை பிடிக்க தனிப்படைபோலீஸார் மும்பையில் முகாமிட்டுள்ளனர். மேலும், காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தடுத்த நகர்வுகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில்தான் திடீர் திருப்பமாக, பாஜக மாநில துணைத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான பால் கனகராஜ் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தனிப்படை போலீஸார் அவருக்கு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, அவர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்தற்போது சிக்கி உள்ளவர்களுக்காகவும் முன்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளதாக தெரிகிறது.இதன் அடிப்படையிலேயே பால்கனராஜிடம் போலீஸார் விசாரித்துள்ளனர்.

அஸ்வத்தாமனும் பால்கனகராஜிடம் அதிகளவு நெருக்கம் காட்டி உள்ளார். மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பார் கவுன்சில் தேர்தல் விவகாரமும் ஒரு காரணம்என குற்றம் சாட்டப்பட்டது. தற்போதுவரை 7 வழக்கறிஞர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் தொடர்பில் பால் கனகராஜ் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற பல்வேறுகாரணங்களுக்காக பால் கனகராஜிடம் 7 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.

அதற்கு அவர் அளித்துள்ள பதில்கள் அனைத்தும் வாக்குமூலமாக பெறப்பட்டுள்ளது. வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை முடிந்து வெளியே வந்த பால் கனகராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த கொலையில் என் மூலம் ஏதாவது துப்பு கிடைக்குமா என்பதற்காக அழைத்து விசாரித்தனர். எனக்கு என்ன தெரியுமோ அதை தெரிவித்து விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். இந்த கொலையில் எனக்கு துளி அளவும் சம்பந்தம் இல்லை.

என்னை விசாரித்ததில் தவறுஇல்லை. அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரித்தனர். 2015-ல் எனக்கும் ஆம்ஸ்டராங்குக்கும் சிறு கருத்து வேறுபாடு இருந்தது. அதுவும் ஒரே வாரத்தில்சரியாகி விட்டது. அதன்பின்னர்2016 முதல் 2024 வரை நெருங்கி பழகி வந்தோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ என்றார்.

இந்நிலையில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 2 பேர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. அக்கட்சிகளில் முக்கிய அங்கம் வகிக்கும் அவர்கள் குறித்த தகவல்களையும் போலீஸார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE