ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வேலூர் மத்திய சிறை ஆயுள் தண்டனைக் கைதி நாகேந்திரன் கைது

By வ.செந்தில்குமார்

வேலூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வேலூர் மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி ரவுடி நாகேந்திரனை செம்பியம் போலீஸார் சம்பிரதாய கைது (பார்மல் அரஸ்ட்) செய்துள்ளனர்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதால் அவரை சம்பிரதாய கைது (பார்மல் அரஸ்ட்) செய்துள்ளனர். இதற்கான ஆணையை செம்பியம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி, வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் முன்னிலையில் நாகேந்திரனிடம் இன்று (ஆக.9) மாலை 6 மணிக்கு அளித்தார். அந்த ஆணையை நாகேந்திரன் வாங்க மறுத்த நிலையில் சிறை அதிகாரிகளிடம் அதற்கான ஒப்புகையை பெற்றுக்கொண்டனர்.

வியாசர்பாடி காவல் நிலைய எல்லையில் கடந்த 1992-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் கைதான நாகேந்திரன், ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2021-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பிரதாயமாக கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக’ காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE