சென்னை: அஸ்வத்தாமன் கைதான நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை மேலும் தீவிரம் அடைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக தலைமறைவாக உள்ள பிரபல தாதா சம்போ செந்திலை பிடிக்க தனிப்படை போலீஸார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த (தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்) வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32) கடந்த செவ்வாய் இரவு கைது செய்யப்பட்டார்.
அவர், பொன்னை பாலு மற்றும் கொலையாளிகளுக்கு திரை மறைவில் இருந்து நேரடியாக உதவி செய்ததை போலீஸார் கண்டறிந்தனர். கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது அஸ்வத்தாமனின் தந்தையான, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரன் என்பது தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.
» மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்: முதல்வர் இன்று தொடங்குகிறார்
இதையடுத்து, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக 2 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2 பிரமுர்கள் மீது போலீஸாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது. அவர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளதால், அவர்களுக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர். இதுமட்டும் அல்லாமல் கொலையாளிகளை ஒருங்கிணைத்ததோடு அவர்களுக்கான சட்ட விரோத பண பரிவர்த்தனைகளை செய்தது பிரபல தாதாவான ரவுடி சம்போ செந்தில் என்பது தெரியவந்துள்ளது.
அவர் மீது, 3 கொலை வழக்கு, நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாம். ஆனால், இதுவரை அவர் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளார். தற்போது அவர் மும்பையில் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் மும்பை விரைந்துள்ளனர்.
மேலும், சம்போ செந்திலின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து பகுதியிலும் விசாரிக்கின்றனர். ஆனால், அவர் சொந்த ஊரை விட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆகி விட்டதால் மும்பையில் அவரது தொடர்பில் உள்ளோரின் விவரங்களை சேகரித்து அதை அடிப்படையாக வைத்தும் போலீஸார் துப்புதுலக்கி வருகின்றனர்.
3-வது முறையாக விசாரணை: கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு, சிவ சக்தி, ஹரிதரன் ஆகியோரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் விசாரிக்கப்படுகின்றனர். கொலையாளிகளில் முக்கியமானவர்களாக கருதப்படும் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் கடந்த 2 முறை விசாரணை நடந்தபோது சில தகவல்களை மாற்றி கூறியுள்ளனர்.
ஆனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விசாரித்தபோது அவர்கள் வேறு விதமாக பதில் அளித்ததுடன் கொலை திட்டம் தொடர்பான வேறு சில புதிய தகவல்களையும் தெரிவித்துள்ளனர். எனவேதான் 3-வது முறையாக பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர் அருள் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சேலம் சிறையில் இருக்கும் சம்போ செந்திலின் கூட்டாளி ஈசாவை, கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் புது வண்ணாரப்பேட்டை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரித்துள்ளனர்.
சம்போ செந்திலின் நெட்வொர்க், ஈசா அவரை சந்திக்கும் இடம், சென்னையில் அவருக்கு யார் யாரெல்லாம் மாமூல் வசூலித்து கொடுப்பவர்கள்? ஆம்ஸ்ட்ராங் கொலையில் எந்தெந்த ஊரை சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தியுள்ளனர். இதேபோன்று, சேலம் மத்திய சிறையில் இருக்கும் சம்போ செந்திலின் மற்றொரு கூட்டாளியான யுவராஜையும் கட்டிட ஒப்பந்ததாரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
21 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
7 days ago