மன்னார் வளைகுடா கடலில் தூக்கி எறியப்பட்ட 4.7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு மன்னார் வளைகுடா கடல் வழியாக கடத்த முயன்ற 4 கிலோ 740 கிராம் தங்கத்தை அந்நாட்டு கடற்படையினர் கைப்பற்றி கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள புத்தளம் மாவட்டம் கல்பிட்டி அருகே மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அந்நாட்டு கடற்பகுதியினர் இன்று ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது ஒரு மர்மப் படகை துரத்திச் சென்றபோது படகில் இருந்தவர்கள் ஒரு பார்சலை கடலுக்குள் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து கடற்படையில் உள்ள நீச்சல் (ஸ்கூபா டைவர்ஸ் ) வீரர்கள் பார்சல் தூக்கி எறியப்பட்ட பகுதியில் நீண்ட தேடுதலுக்குப் பிறகு ஒரு பார்சலை கைப்பற்றினர்.

அந்தப் பார்சலை சோதனை செய்தபோது அதில், 4 கிலோ 740 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3 கோடியே 30 லட்சம் ஆகும். முதற்கட்ட விசாரணையில், கடத்தல் தங்கம் தமிழக கடற்பகுதிக்கு கடத்தவிருந்தது தெரியவந்துள்ளது. இதில், கடத்தலுக்குப் பயன்பட்ட ஃபைபர் படகையும் கல்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படையினர், தப்பிச்சென்ற கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE