சென்னையில் டிஜிபி பெயரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: இ-மெயில் அனுப்பியவர் குறித்து விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இ-மெயில் முகவரி உருவாக்கி, அதன்மூலம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் மர்ம நபர் ஒருவர், போலியான இ-மெயில் முகவரியை தொடங்கி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இந்த பள்ளிக்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி, மவுன்ட் ராணுவ பள்ளிக்கும் வெவ்வேறு இ-மெயில் முகவரிகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.

சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் துறைக்கு கடிதம் மூலமாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வெடிகுண்டுகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார், மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால், சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என உறுதி செய்யப்பட்டது.

இந்த மிரட்டல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE