கடலூரில் மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கைதி: மூன்று காவலர்கள் சஸ்பெண்ட்

By க.ரமேஷ்

கடலூர்: மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி, தனது மனைவியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் தொடர்பாக 3 காவலர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து கைதி சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரவுடி சூர்யா என்பவர் பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். பின்னர் அவர் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையில் சென்ற பிரகாஷ் என்பவர் கத்தி பட்டு படுகாயம் அடைந்தார். ரவுடி சூர்யாவை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் பிடிக்க முற்பட்டபோது அவர் தப்பி ஓடினார். அப்பொழுது கீழே விழுந்த ரவுடி சூர்யாவிற்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ரவுடி சூரியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் கைதிகள் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி இரவு ரவுடி சூர்யா தனது மனைவியுடன் மருத்துவமனையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். மருத்துவமனையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்த போது மனைவி மற்றும் நண்பர்களுடன் அவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதுடன் தனது மனைவிக்கும் கேக்கு ஊட்டி விட்டுள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் நேற்று (ஆக.4) காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல் துறையினர் விரிவான விசாரணை மேற்கொண்டு வந்தனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய முதுநிலை காவலர் சாந்தகுமார் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் வேல்முருகன், கவியரசன் ஆகிய 3 பேரையும் பணியிட நீக்கம் செய்து நேற்று இரவு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி சூர்யாவை சென்னை மருத்துவமனைக்கு மாற்ற மத்திய சிறை நிர்வாகம் முடிவு செய்து நேற்று இரவோடு இரவாக அவர் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE