தாம்பரத்தில் சரக்கு வாகனம் மோதி தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு: ஒருவர் காயம்

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: தாம்பரத்தில் சரக்கு வாகனம் மோதி தூய்மைப் பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். மற்றுமொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் தர்மன்னா (35), இவரது மனைவி அனிதா (32). இத்தம்பதி தாம்பரம் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்துள்ள அவர்லேண்ட் என்ற நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று (ஆக.5) காலை சுமார் 6.30 மணி அளவில் தாம்பரம் - முடிச்சூர் சாலையில் தாம்பரம் மேம்பாலம் கீழ் இறங்கும் பகுதியில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கோயம்பேட்டில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்கள் மீது வேகமாக மோதி அங்கு நின்று கொண்டிருந்த குப்பைகளை எடுக்கும் டிராக்டர் மீது மோதி நின்றது. இந்த இரண்டு வாகனங்களுக்கு இடையே தூய்மை பணியாளர் தர்மன்னா சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தருமண்ணன்

லட்சுமணன் (23) காயம் ஏற்பட்டது, சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர் பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமானது. அதன் பின்னர் உடலை மீட்ட போலீஸார் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு என்ன உதவி தேவையோ அதனை உடனுக்குடன் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த விபத்தினால் தாம்பரம் - முடிச்சூர் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE