பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: ரூ.6.54 லட்சம் சிக்கியது

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டிட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணியில் இருந்து இன்று (3ம் தேதி) காலை 7 மணி வரை லஞ்ச ஒழிப்புதுறை போலீஸ் டி.எஸ்.பி., நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள இடத்துக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்ச பணத்தை பெற்று மறைத்து வைத்து இருந்த பொறியாளர் மனோகரனிடம் இருந்து 84 ஆயிரம் ரூபாய், ஒப்பந்தக்காரர் எடிசன் என்பவரிடம் இருந்து 66 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், போலீஸாரை கண்ட நகராட்சி ஆணையர் குமரனின் கார் ஓட்டுநர் வெங்கடேஷன் நகராட்சி அலுவலகத்தின் காம்பவுண்டு சுவரில் இருந்து 8,000 ஆயிரம் ரூபாயை துாக்கி வீசியதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், 5 லட்சம் ரூபாயை கமிஷனர் வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஓட்டுனரின் அழுக்கு துணிகளுடன் மறைத்து வைக்க சொல்லி இருந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புதுறை போலீஸர், நகராட்சி ஆணையர் குமரன், உதவி பொறியாளர் மனோகரன், கார் ஓட்டுநர் வெங்கடேசன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைவரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE