சென்னையில் பெண் எஸ்ஐ திடீர் மரணம்: இறப்பு குறித்து போலீஸார் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பெண் எஸ்.ஐ. ஒருவர் திடீரென மரணம் அடைந்துள்ள விவகாரம் காவல் துறைவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பெரவள்ளூர், ராதாகிருஷ்ணன் நகர், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா(49). செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறைபணியில் சேர்ந்த இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வசித்தார்.

திடீர் வாந்தி, மயக்கம்: இவர் நேற்று முன்தினம் தபால் பணி காரணமாக சென்னை மெரினாகடற்கரையில் உள்ள தடய அறிவியல் துறைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.

பின்னர், அயனாவரம் பழனியப்பா தெருவில் உள்ள சகோதரிபாண்டிச் செல்வி வீட்டுக்குச் சென்றார். இரவு 8.30 மணியளவில் சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த பாண்டிச்செல்வி, சகோதரியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயசித்ரா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். ஜெயசித்ரா இறப்பு குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காவல் உதவிஆய்வாளர் ஒருவர் மரணம் அடைந்தது காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE