மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது: கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

மதுரை: மலையாள திரைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே, அவற்றை `தமிழ் ராக்கர்ஸ்' வலைதளத்தில் பதிவேற்றிய, மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜை (33) திருவனந்தபுரத்தில் கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

கேரளாவில் ‘குருவாயூர் அம்பலநடையில்’ எனும் நகைச்சுவை மலையாள திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இதில், நடிகர்கள் பிருத்விராஜ், பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் கேரளாவில் வெளியான சில நாட்களிலேயே வலைளத்திலும் வெளியானது.

தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்தில் இந்தப் படம் வெளியிடப்பட்டதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுப்ரியா மேனன் கொச்சி சைபர் க்ரைம் போலீஸில் கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில், தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்தின் முக்கிய அட்மினாக மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் செயல்பட்டதைக் கண்டறிந்தனர்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் ஒரு திரையரங்கில் தனுஷ் நடித்த ராயன் திரைப்படத்தை ரகசியமாக பதிவு செய்து கொண்டிருந்த ஸ்டீபன் ராஜை கொச்சி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், திரையில் வெளியாகும் புதிய படங்களின் முதல்நாள் காட்சியின்போதே கேமரா மூலம் வீடியோ எடுத்து, அவற்றை வலைதளத்தில் பதிவேற்றியதும், ஒரு படத்தை பதிவேற்றம் செய்ய ரூ.5,000-ம் பெற்றதும்தெரிந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அண்மையில் வெளியான கல்கி, மகாராஜா படங்களையும் இவர் வலைதளத்தில் பதிவேற்றி யுள்ளது தெரியவந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE