கொல்லப்பட்ட ரவுடி குறிப்பிட்டிருந்த 22 எதிரிகளின் பெயர்கள்: தொடையில் இருந்த ‘டாட்டூ’ மூலம் 5 பேரை கைது செய்த மும்பை போலீஸ்

By செய்திப்பிரிவு

மும்பை: குரு வாங்மேர் (48) என்பவர் கடந்த புதன்கிழமை மும்பை வோர்லியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் கொல்லப்பட்டுக் கிடந்தார். இவ்வழக்கில் அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் ஷெரேகர் உட்பட 5 பேரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளது.

பாலியல் வன்கொடுமை, மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்த குரு வாங்மேரின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரதுதொடைப் பகுதியில் 22 பெயர்கள் பச்சைக் குத்தப் பட்டிருந்தது தெரியவந்தது.

அதில் அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் ஷெரேகரின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மும்பை போலீஸார் கூறுகையில், “குரு வாங்மேர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரங்கள் பெற்றுஅதன் அடிப்படையில் புகார் அளித்து ஷெரேகர் உட்பட சில அழகு நிலைய உரிமையாளர்களை மிரட்டி பணம் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி அவர் அளித்த புகார் காரணமாக முகம்மதுபெரோஸ் அன்சாரி (26) என்பவர் நடத்தி வந்த அழகு நிலையத்தை காவல் துறை கடந்த ஆண்டு மூடியது.

இந்நிலையில், குரு வாங்மேரின்செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று ஷெரேகரை சந்தித்து அன்சாரி கலந்தாலோசித்துள்ளார். குரு வாங்மேரை கொன்றுவிடலாம் என்று ஷெரேகர் கூறியுள்ளார். இதற்காக அன்சாரிக்கு ஷெரேகர் ரூ.6 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் சுஹைப் என்பவரை அன்சாரி தொடர்பு கொண்டு பேசி,இருவரும் வாங்மேரைக் கொல்லத்திட்டமிட்டனர். மூன்று மாதங்களாக, வாங்மேரைப் பின்தொடர்ந்த அவர்கள், வாங்மேரை ஷெரேகரின் அழகு நிலையத்தில் வைத்து கொல்ல முடிவு செய்தனர்.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் வாங்மேர் தனது காதலியுடன் ஷெரேகரின் அழகு நிலையத்தில் இருந்த நிலையில், அங்கு பெரோஸ் அன்சாரியும் சுஹைப்பும் நுழைந்தனர். வாங்மேரின் காதலியை மற்றொரு ரூமில் அடைத்த அவர்கள், தனியே இருந்த வாங்மேரை ரூ.7,000 மதிப்புள்ள கத்தரிகோலால் கழுத்தை அறுத்தும் வயிற்றைக் குத்தியும் கொன்றுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இவ்வழக்கில் அழகு நிலையத்தின் உரிமையாளர் ஷெரேகர், கொலையில் ஈடுபட்ட பெரோஸ் அன்சாரி மற்றும் சுஹைப், மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் என மொத்தம் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE