கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து கிரிக்கெட் வீரர் தற்கொலை: டிஎன்பிஎல்-ல் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் சோகம்

By செய்திப்பிரிவு

சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து கிரிக்கெட்வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உண்மை நிலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் வழியாக நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர், பாலத்தின் மேற்பரப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, பாலத்திலிருந்து திடீரென கீழே குதித்தார். சுமார் 30 அடி உயரத்திலிருந்து குதித்ததால் பலத்த காயமடைந்தார்.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். 108 ஆம்புலன்ஸை உடனடியாக வரவழைத்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அந்த இளைஞர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தகவலை அறிந்து பரங்கிமலை காவல் மாவட்ட போலீஸார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சம்பந்தப்பட்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் விசாரணையில் அந்த இளைஞர் விருகம்பாக்கம், கிருஷ்ணா நகர்பகுதியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் (23) என்பது தெரியவந்தது. பி.காம் முடித்துள்ள அவர் கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். மேலும், பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது நடந்துவரும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று பெரிதும் நம்பி இருந்தாராம். ஆனால், அதில் வாய்ப்பு கிடைக்காததால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக ஏற்பட்ட விரக்தி மற்றும் ஏமாற்றத்தில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE