மதுரை காவல் ஆணையர் பெயரில் மீண்டும் போலி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி மோசடிக்கு முயற்சி!

By என்.சன்னாசி

மதுரை: மதுரை காவல் ஆணையர் பெயரில் மீண்டும் போலி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி மோசடிக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநகர சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரின் ஃபேஸ்புக் கணக்குக்கு, இன்று காலை மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் பெயரில் ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. இதை ஏற்பதாக பதிலளித்த, சில நிமிடத்தில் மெசேஞ்சரில் ‘ஹாய்’ எனக் கூறி நலம் விசாரித்துள்ளார். பிறகு சமூக ஆர்வலரின் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். அதற்கு சமூக ஆர்வலர், ‘எதற்கு எனது எண்ணை கேட்கிறீர்கள்?’ என, கேட்டபோது, எதிர்முனை இணைப்பில் இருந்த அந்த நபர் , ‘எனது நண்பரான சந்தோஷ்குமார், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் வெளியூருக்கு பணி மாறுதலாகி செல்வதால் தனது வீட்டு ஃபர்னிச்சர் பொருட்களை விற்க விரும்புகிறார். அவர் வீட்டுப் பொருட்கள் அனைத்தும் புதியவை, நல்ல நிலையில் உள்ளன. மலிவு விலையில் கிடைக்கும். இதனை நீங்கள் விரும்பினால் வாங்கிக் கொள்ளலாம்’ எனக் கூறியுள்ளார்.

இதற்கு சமூக ஆர்வலர் பதில் அளிக்காத நிலையிலும், தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் உஷாரான சமூக ஆர்வலர், மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் யாரோ போலி நபர்கள் பேசுவதாக தெரிந்து கொண்டு அக்கவுண்டை டெலிட் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இதேபோன்று மாநகர காவல் ஆணையர் பெயரில் போலியான அக்கவுண்ட் தொடங்கி பேசியது தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மீண்டும் 5 மாதம் கழித்து மாநகர காவல் ஆணையர் பெயரில் சிஆர்பிஎஃப் அதிகாரி என்ற பெயரில் மீண்டும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட முயற்சி நடந்திருக்கிறது. பிப்ரவரியில் ஆசீஸ்குமார் என்றும், தற்போது சந்தோஷ்குமார் எனவும் போலி ஐடி உருவாக்கி மோசடிக்கு முயன்றவர் ஒரே நபராக இருக்கலாம் எனத் தெரிகிறது. காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக மாநகர சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE