சென்னையில் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கைது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னையில், சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக போலீஸ் பூத் மீதும் டாஸ்மாக் கடை முன்பாகவும் பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகர் மேற்கு அன்னை சத்யா நகரில் நேற்றிரவு (ஜூலை 25) மதுபோதையில் நடந்து வந்த இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை போலீஸ் பூத் அருகே இருந்த சுவற்றில் வீசியுள்ளார். இதில், பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது‌‌. பின்னர் அதே இளைஞர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மற்றொரு பெட்ரோல் குண்டை வீசிய போது அது கடைக்கு முன்பு வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.

அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எவ்வித காயமுமோ பாதிப்போ ஏற்படவில்லை. உடனடியாக அந்த வழியாகச் சென்ற சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நபரை பிடித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் அண்ணாநகர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த பாலமுரளி (31) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது ஏற்கெனவே கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயுடன் திருச்சிக்குச் சென்ற பாலமுரளி அங்கேயே வசித்து வந்த நிலையில், மதுபோதைக்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து சென்னை வந்த பாலமுரளி சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இரு பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரி வைத்து கொளுத்தி வீசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.‌

இதனையடுத்து போலீஸார், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பாலமுரளியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE