துபாய், சார்ஜா, இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.2 கோடி தங்கம், இ-சிகரெட்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: துபாய், சார்ஜா, இலங்கையில் இருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.2 கோடி மதிப்புடைய தங்கம்,இ-சிகரெட்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், துபாயிலிருந்து, சென்னை வந்த விமானத்திலிருந்து இறங்கிய 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி, அவர்களது உடைமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது, அதில் அதிகளவு வெள்ளி நாணயங்கள் இருந்ததைக் கண்டனர். அந்தநாணயங்களை ஆய்வு செய்தபோது, அனைத்தும் தங்க நாணயங்கள் எனத் தெரியவந்தது. தங்கத்தை மறைப்பதற்காக, அந்த நாணயங்கள் மீது வெள்ளி முலாம் பூசப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த 781 கிராம் தங்க நாணயங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நாணயங்களின் சர்வதேச மதிப்பு ரூ.39 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், இலங்கையிலிருந்து சென்னை வந்த தனியார் பயணிகள் விமானத்தில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணியை சோதனை செய்தனர். அப்போது, அவரது கையில் தங்க வளையம், விரலில் தங்க மோதிரம் மற்றும் கழுத்தில் தங்கச் செயின் அணிந்திருந்ததைக் கண்ட அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த நகைகள் அனைத்தும், 24 காரட் சுத்த தங்கத்தில், செய்யப்பட்டது என்பதும், சுத்த தங்கத்தை ஆபரணம் போல் உருவாக்கி அணிந்து கடத்தி வந்துள்ளார் என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்து, அவரிடம் இருந்த 497 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 பயணிகள் மீது வழக்கு: அதேபோல் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த மதுரையைச் சேர்ந்த பயணியிடம் ரூ.21 லட்சம் மதிப்புள்ள 366 கிராம் தங்க நகைகளையும், துபாயிலிருந்து மற்றொரு விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த பயணியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 1,200 இ-சிகரெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில் மொத்தம் ரூ.1.2 கோடி மதிப்புடைய தங்கம், இ-சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பயணிகள் மீது வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE