சென்னை | பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியவர் கைது: போலீஸ் விரட்டியபோது கை எலும்பு முறிந்தது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் இளைஞர்கள் சிலர், கடந்த 5-ம் தேதி இரவு சாலையில் கேக் வைத்து அதை பட்டாக்கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதே பட்டாக் கத்தியை சாலையில் உரசி தீப் பொறி பறக்க விட்டவாறு காரில் அதிவேகமாக சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சைதாப்பேட்டை போலீஸார் நேற்று முன்தினம் சைதாப்பேட்டை, ஆடுதொட்டி பாலம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞர்கள் 5 பேரை விசாரிக்க முயன்றனர். போலீஸாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.போலீஸார் அவர்களை துரத்திச் சென்று பிடித்தனர்.

பின்னர், அவர்களிடம் விசாரித்தபோது பிடிபட்டவர்கள் சைதாப்பேட்டையைச் சேர்ந்த எழிலரசன் (29), அதே பகுதி வினோத் (19), ஜாபர்கான்பேட்டை விக்கி என்ற விக்னேஷ் (26), சரவணன் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள பப்ஸ் கார்த்திக் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 5-ம் தேதி பனையூரில் தற்போது கைதான எழிலரசனின் பிறந்தநாளை தாம்பரம் காவல் ஆணையரகம், கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பட்டா கத்தியால்கேக் வெட்டியும், கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் காரில் சென்றது தொடர்பாகவும் கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இது ஒருபுறம் இருக்க சாலையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய எழிலரசனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றபோது பாலத்திலிருந்து கீழே விழுந்த எழிலரசனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதாக போலீஸார் விளக்கம் அளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE